கோலாலம்பூர்: பண்டிகைக் காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் மலிவாகவும் பயணம் செய்ய உதவும் வகையில், தெரிவு செய்யப்பட்ட இடிஎஸ் ரயில் பயணங்களுக்குக் கட்டணக் குறைப்பை ‘கேடிஎம்பி’ எனும் மலேசியத் தேசிய ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தச் சலுகை, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இதனை செயற்படுத்திக்கொள்ள ETSANGPOW20, ONGTRAIN20 ஆகிய இரு குறியீடுகளை அது அறிமுகப்படுத்தியுள்ளது.
மொத்தமாக 5,000 குறியீடுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. எனவே, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இது வழங்கப்படும்.
பயணிகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மலிவுக் கட்டணத்தில் பயணச் சீட்டுகளைப் பின்வரும் வழிகளில் வாங்கலாம்: KITS கைப்பேசிச் செயலி, ‘கேடிஎம்பி’ அதிகாரத்துவ இணையத்தளம், ரயில் நிலையங்களில் உள்ள சுயசேவை இயந்திரங்கள் (Kiosk machines).
“இந்த 20 விழுக்காட்டுத் தள்ளுபடி, பண்டிகைக் காலங்களில் பயணிகளின் செலவைக் குறைக்க உதவும். அதே வேளையில், சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய இது ஒரு சிறந்த மாற்றாக அமையும்,” என்று ‘கேடிஎம்பி’ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்லான் ஷா அல்-பக்ரி கூறினார்.
எனவே, பொதுமக்கள் இந்தப் பண்டிகைக்காலச் சலுகையைப் பயன்படுத்தி முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

