ஊழியர்களுக்குப் பேரளவிலான போனஸ் தந்ததற்குப் பெயர்போன தைவானிய நிறுவனம் ஒன்று, மீண்டும் அவ்வாறு செய்துள்ளது.
கப்பல் நிறுவனமான ‘எவர்கிரீன்’, ஆண்டிறுதி போனஸ் தொகையாக அதன் ஊழியர்களுக்குச் சராசரியாக 20 மாதச் சம்பளம் வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) அறிவித்தது.
ஊழியர்களுக்கு மேலும் மூன்று மாதச் சம்பளம், போனஸ் தொகையாக வழங்கப்படும் என்று தைவான் நியூஸ் தெரிவித்தது.
எவர்கிரீன் ஊழியர்களின் சராசரி சம்பளம் ஏறக்குறைய NT$60,000 (S$2,500) என உள்ளூர் ஊடகங்கள் 2023ல் தெரிவித்திருந்தன. அதன் அடிப்படையில், ஊழியர்களுக்கு ஆண்டிறுதி போனஸ் தொகையாக ஏறத்தாழ S$50,000 கிடைக்கும்.
ஊழியர்களுக்கு தாராள போனஸ் தரும் எவர்கிரீன், 2021ல் ஆண்டிறுதி போனஸ் தொகையாக அதன் ஊழியர்களுக்கு 40 மாதச் சம்பளம் வரை தந்தது. அதையும் விஞ்சி, 2022ல் ஊழியர்களுக்கு 52 மாதச் சம்பளம் வரை போனஸ் கிடைத்தது.
2024ன் முதல் மூன்று மாதங்களுக்கு NT$108.754 பில்லியன் நிகர லாபத்தை எவர்கிரீன் அறிவித்தது. 2023ல் இருந்ததைவிட இது 239.4 விழுக்காடு அதிகம் என தைவான் நியூஸ், நவ் நியூஸ் ஊடகங்கள் தெரிவித்தன.
உலக நடப்புகள் காரணமாக எவர்கிரீனின் லாபம் 2025லும் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.