வாஷிங்டன்: 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து, அவருக்கு ஆதரவான கும்பல் ஒன்று 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது.
இதில் ஆக மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்ததாகக் கூறப்படும் ஆடவருக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கலவரம் தொடர்பாக இரண்டாவது ஆகக் கடுமையான தண்டனையை கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 37 வயது டேவிட் டெம்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏறத்தாழ 1,500 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்களில் அரசாங்கத்துக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியதற்காக என்ரிக்கே டாரியோ என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட வன்முறைமிக்க கலவரம் காரணமாக குறைந்தது ஐவர் மாண்டனர், 140 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.
கலவரத்தின்போது டெம்சி மற்ற கலவரக்காரர்கள் மீது ஏறி, முந்தியடித்துக்கொண்டு சென்றதாக அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
கொடிக் கம்பங்கள், மிளகு நீர்த் தெளிப்பான், உடைந்த மரக்கலன்கள் எனக் கையில் கிடைத்தவற்றைக் காவல்துறைக்கு எதிராக அவர் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

