தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

200 பாம்புக்கடியைத் தாங்கியதால் விஷ முறிவு மருந்துத் தயாரிப்புக்கு வழிவகை

1 mins read
cad14b61-90db-462c-b0fc-4987825cb393
திரு டிம் ஃபிரிட், 2000 முதல் 2018 வரை 200க்கும் மேற்பட்ட முறை பாம்புகள் தம்மைக் கடிக்கவிட்டார். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: 2011 செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அடுத்த நாள் மனச்சோர்வுடன் இருந்த திரு டிம் ஃபிரிட், தம்மை இரண்டு பாம்புகள் கடிக்க வைத்தார்.

நான்கு நாள் கழித்து அவர் கோமாவிலிருந்து எழுந்தார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம், டு ரிவர்சில் உள்ள சிற்றூரில் தமது வீட்டிலிருந்து காணொளி அழைப்புமூலம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “பாம்புக் கடியிலிருந்து இறப்பது எப்படி இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியும்,” என்றார்.

திரு ஃபிரிட், 2000 முதல் 2018 வரை 200க்கும் மேற்பட்ட முறை பாம்புகள் தம்மைக் கடிக்கவிட்டார். மேலும், பாம்புகளின் நஞ்சைக் கொண்டு 650க்கும் மேற்பட்ட முறை ஊசி போட்டுக்கொள்ளவும் அவர் செய்தார்.

பாம்பு நஞ்சுக்கு எதிராக முழு நோயெதிர்ப்பாற்றலைப் பெறுவதற்காக திரு ஃபிரிட், 57, இந்த வலியைப் பொறுத்துக்கொண்டார்.

மேம்பட்ட வகை விஷ முறிவு மருந்தைத் தயாரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக தாம் விளங்கலாம் என திரு ஃபிரிட் நம்பினார்.

முன்னாள் டிரக் வாகன பழுதுபார்ப்பு ஊழியரான இவர், தமது செயல்பாட்டை அறிவியலாளர்களிடம் கொண்டு சேர்க்க பலகாலமாக சிரமப்பட்டு வந்தார்.

ஆனால், பிரசித்திபெற்ற ‘செல்’ இதழில் மே மாதம் வெளியான ஆய்வு ஒன்று, திரு ஃபிரிட்டின் ரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பாற்றல் பலவகை பாம்பு நஞ்சுக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்குவதைக் காட்டியது.

திரு ஃபிரிட்டின் அதீத நோயெதிர்ப்பாற்றல், உலகளவில் பயன்படுத்தப்படக்கூடிய விஷ முறிவு மருந்துத் தயாரிப்புக்கு வித்திடக்கூடும் என ஆய்வாளர்கள் இப்போது நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்