நைரோபி: எதிர்க்கட்சியைச் சேர்ந்த 2,000 ஆதரவாளர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், 30 பேரைக் கொன்றதாகவும், மேலும் பலரைத் தேடி வருவதாகவும் உகாண்டாவின் ராணுவத் தலைவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) அன்று கூறினார். சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் அவரது தந்தை யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக வழிநடத்தி வரும் 81 வயது முசேவேனி, ஜனவரி 15ஆம் தேதி இணைய முடக்கத்தின்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைத் தளம் எனும் கட்சியின் தலைவரான போபி வைனியை மகத்தான முறையில் தோற்கடித்ததாக அறிவிக்கப்பட்டது.
ராபர்ட் கியாகுலானி என்ற சட்டபூர்வ பெயருடைய முன்னாள் இசைக் கலைஞரான வைனி, வாக்குச் சீட்டுத் திணிப்பு உட்பட பரவலான முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தேர்தல் முடிவை நிராகரித்து தலைமறைவானார்.
இரவு முழுவதும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட தொடர் பதிவுகளில், முசேவேனியின் மகனான ராணுவத் தலைவர் முஹூசி கைனெருகாபா, தேசிய ஒற்றுமைத் தளத்தின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான முதற்கட்ட விவரங்களை அளித்தார். அவர்களைக் குண்டர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் விவரித்தார்.
“இதுவரை நாங்கள் 30 தேசிய ஒற்றுமைத் தளத்தின் பயங்கரவாதிகளைக் கொன்றுள்ளோம்,” என்று கைனெருகாபா எக்ஸ் தளத்தில் கூறினார். இறப்புக்கான சூழ்நிலைகளை விளக்காமல், “பெரும்பாலான தேசிய ஒற்றுமைத் தளத்தின் பயங்கரவாதத் தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் நாங்கள் பிடிப்போம்,” என்று அவர் மற்றொரு பதிவில் கூறினார்.
தேர்தலின்போது வைனியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதேநேரத்தில் எதிர்க்கட்சி தனது உறுப்பினர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதாகக் கூறுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

