இலவசப் பள்ளி உணவால் 2,000 மாணவர்கள் பாதிப்பு: தீவிர விசாரணைக்குக் கோரிக்கை

இலவசப் பள்ளி உணவால் 2,000 மாணவர்கள் பாதிப்பு: தீவிர விசாரணைக்குக் கோரிக்கை

2 mins read
8b3f2295-2b44-4e9a-b083-98ab6238b29a
இந்தோனீசியாவின் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் குறித்துக் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. - படம்:இபிஏ
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்  கோரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான இலவச மதிய உணவு திட்டத்தின் முன்னோடி முயற்சியின்போது  இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதால் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 2,000 மாணவர்களுக்குத் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கு மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளிலும் சுகாதார நிலையங்களிலும் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றனர். 

எனினும், ஒரே நேரத்தில் இத்தனை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர், கல்வியாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், குழந்தைகள் பாதுகாப்பான சத்துள்ள உணவைப் பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமை எனக் குறிப்பிட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உணவு தயாரிப்பு முதல் விநியோகம் வரையிலான அனைத்துகட்ட நடவடிக்கைகளையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் பல பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இலவச உணவுத் திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு விரிவாக்கப்பட உள்ள நிலையில், தொடக்கக்கட்டத்திலேயே இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது இந்தோனீசிய அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இனிவரும் நாள்களில் உணவு சமைக்கப்படும் இடங்கள், விநியோக முறைகளில் கடுமையான சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
உணவு நச்சுஇந்தோனீசியாமாணவர்கள்விசாரணை