மலேசியாவில் 20,000 ஹெக்டர் அளவிலான நெல் வயல்கள் கைவிடப்பட்டன: அமைச்சர்

மலேசியாவில் 20,000 ஹெக்டர் அளவிலான நெல் வயல்கள் கைவிடப்பட்டன: அமைச்சர்

2 mins read
பல இளம் குடும்பங்கள் விவசாயத்தைத் தொடராமல் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்: விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
fd86a90d-d9d1-42a7-984a-37f76848c6b0
பெர்லிஸ் மாநிலத்தின் அரிசி விளைநிலம். - படம்: மலேசிய சுற்றுலாக் கழகம்

பெக்கான்: மலேசியாவில் சொத்து மேம்பாட்டுக்கெனப் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது 20,000 ஹெக்டர் பரப்பளவுக்கும் மேற்பட்ட நிலம் கைவிடப்பட்டுள்ளது.

இதன் விவரங்களை, வேளாண், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகம்மது சாபு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்தார். வீடமைப்பு அல்லது இதர மேம்பாட்டுக்கு முன்னர் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த நிலங்களில் சில பிறகு விட்டுச்செல்லப்பட்டன என்று அவர் விளக்கினார்.

பாகாங் மாநிலத்தில் கைவிடப்பட்ட விளைநிலங்களை விவசாயத்துக்காக மீட்டெடுக்கும் முயற்சியில் பாஹாங் துவா பகுதியில் அவற்றைப் பார்வையிடச் சென்றபோது அமைச்சர் அவ்வாறு கருத்துரைத்தார்.

“பல இளம் குடும்பங்கள் விவசாயத்தைத் தொடராமல் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் அதுவும் விளைநிலங்கள் கைவிடப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க அமைப்புகளின் உதவியோடு, கைவிடப்பட்ட நெல் வயல்களைத் தனியார் நிறுவனங்கள் மேம்படுத்த முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி நில உரிமையாளர்களுடன் வாடகை ஒப்பந்த முறையை நிறுவனங்கள் செய்துகொள்ளலாம்.

உதாரணமாக, பிஎல்எஸ் குழுமம் பாகாங் மாநிலத்தில் கைவிடப்பட்ட அரிசி பயிரிடப்படும் விளைநிலங்களை மேம்படுத்த வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள இணங்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

விளைநிலங்களைப் பராமரிக்க முடியாத முதியோர் விவசாயத்தைத் தொடரவும் அவை தரிசு நிலமாகப் போவதைத் தடுக்கவும் இத்திட்டம் ஒரு வகையில் உதவ முடியும் என்று அமைச்சர் கூறினார்.

பாகாங் துவா பகுதியில் உள்ள 200 ஹெக்டர் பரப்பளவிலான கைவிடப்பட்ட அரிசி பயிரிடப்படும் விளைநிலங்களை மீட்கும் பிஎல்எஸ் நிறுவனத் திட்டத்தில் இதுவரை 548 விவசாயிகளில் 100 பேர் இணைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்