கோலாலம்பூர்: காலாவதியான மோட்டார் வாகன உரிமம் அல்லது சாலை வரியுடன் வாகனங்களை ஒட்டியதற்காக 2023ஆம் ஆண்டிலிருந்து சாலைப் போக்குவரத்துத் துறை 35,555 வாகனங்களைப் பறிமுதல் செயதுள்ளதாக மலேசிய மக்களவையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) தெரிவிக்கப்பட்டது.
இதே காலகட்டத்தில், காலாவதியான சாலை வரியுடன் வாகனங்களை ஓட்டிய ஓட்டுநர்களுக்கு 1,608,238 பி22 அழைப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
2023 பிப்ரவரியில் சாலை வரி மின்னிலக்கமயமாக்கப்பட்டது, நாட்டின் மின்னிலக்கமயமாதல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதோடு, அச்சிடும் செலவுகளையும் சேவை முகப்புகளில் ஏற்படும் நெரிசல்களையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன ஓட்டுநர்கள் தங்களின் அச்சு வடிவிலான சாலை வரி ஒட்டுவில்லைகளைக் காட்சிப்படுத்த தேவை இல்லை என்றாலும், சாலை வரி புதுப்பிக்கப்பட்டு அது செல்லுபடியாகும் நிலையில் இருப்பதை உறுதிசெய்வது வாகன உரிமையாளர்களின் பொறுப்பாகவே தொடர்ந்து உள்ளது.
சாலைப் போக்குவரத்துத் துறையின் கணினி அமைப்பு மூலம் சாலை வரியின் செல்லுபடியாகும் தன்மையை மின்னிலக்க முறையில் அமலாக்க அதிகாரிகளால் சரிபார்க்க முடியும் என்றும் காலாவதியான சாலை வரியுடன் வாகனங்களை ஓட்டுபவர்கள்மீது சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
