தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2025 வரவுசெலவுத் திட்டம் வாழ்க்கை செலவின அதிகரிப்பை கட்டுப்படுத்தும்: அன்வார்

2 mins read
0b566554-b92d-46fd-8308-26121120fc8e
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

கிள்ளான்: மக்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பில் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) நடந்த தனியார் நிறுவனமான வெஸ்ட்ஃபோர்ட்ஸ் மலேசியாவின் ஊழியர்களுடனான சந்திப்பு, வாழ்த்து நிகழ்ச்சியில் திரு அன்வார் இப்ராகிம் கலந்துகொண்டார்.

“அதிகரித்துவரும் பொருள்களின் விலை, தற்போது மலேசிய மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. அவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அக்டோபர் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இருக்கும்,” என அந்த நிகழ்வில் உரையாற்றும்போது திரு அன்வார் தெரிவித்தார்.

மேலும், சில பொருள்களின் விலை உயர்ந்தாலும், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த விலையுயர்வு அவ்வளவு கடுமையானது இல்லை என்றார் அன்வார்.

“சமையல் எண்ணெய், மாவு, சர்க்கரை போன்ற பொருள்கள் ஆசியான் வட்டாரத்திலேயே மலேசியாவில் தான் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இங்கு சர்க்கரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அரிசியின் விலை இந்தோனீசியாவையும் தாய்லாந்தையும்விட மலேசியாவில் குறைவாக உள்ளது,” எனத் திரு அன்வார் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளைவிட அத்தியாவசியப் பொருள்களின் விலை மலேசியாவில் குறைவாக இருந்தாலும், விலையுயர்வைக் குறைக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

இதற்கானத் தீர்வை உடனடியாக நாம் கொண்டுவர வேண்டும் என்றார் மலேசியப் பிரதமர் அன்வார்.

“சில தரப்பினர் என்னைப் பற்றிக் கூறும் இழிவான விமர்சனங்களை எண்ணி நான் கலங்கவில்லை. இருப்பினும், இதுபோன்ற கருத்துகள் மற்றவர்களை வீழ்த்தாத வகையில் ஆக்கபூர்வமான முறையில் இருந்தால் நல்லது,” என அவர் கூறினார்.

யூதர்கள் மற்றும் இஸ்ரேலின் முகவர் என்று என்னை சிலர் முத்திரையிடுகின்றனர். பல ஆண்டுகளாக ஆண், பெண் இருவருடனும் நான் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இவற்றையெல்லாம் எண்ணி ஒரு நாளும் நான் கலங்கியதில்லை என்றார் திரு அன்வார்.

எந்நேரத்திலும் தமது சொத்துக்களை அறிவிக்கத் தாம் தயாராக இருப்பதாகத் திரு அன்வார் தெரிவித்தார்.

“நாளை கேட்டால், கூட எனது சொத்துக்களை மீண்டும் அறிவிப்பேன். எவ்வளவு வேண்டுமானாலும் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்,” என அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்