பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு விரைவுச்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு 50 விழுக்காடு சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்தச் சலுகை ஜோகூரின் நுழைவாயிலில் உள்ள இரு சுங்க நிலையங்கள் தவிர மற்ற எல்லா சுங்க நிலையங்களையும் கடந்து செல்லும் எல்லா தனியார் வாகனங்களுக்கும் பொருந்தும்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்திலும் தஞ்சோங் குப்பாங்கில் உள்ள இரண்டாவது பாலத்திலும் உள்ள சுங்க நிலையங்களுக்குக் கட்டணச் சலுகை பொருந்தாது.
பாதிக்குப் பாதி சுங்கக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதற்கான முடிவு வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) மலேசிய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக பொதுப் பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
17 விரைவுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு
இதற்கிடையே, மலாக்கா மாநிலத்தில் 17 விரைவுப் பேருந்துகள் சேவையில் இருந்து விலக்கப்பட்டதாக மாநில பொதுப் பணி, உள்கட்டமைப்பு, பொது வசதி மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவரான ஹமீது மைதீன் குஞ்சு பஷீர் தெரிவித்து உள்ளார்.
சீனப் புத்தாண்டு காலப் பயணத்தின்போது அந்தத் தடையை விதிக்க பழுதடைந்த பேருந்து சக்கரங்களும் ஒரு காரணம் என்றார் அவர்.
ஜனவரி 13 முதல் பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட விழாக்காலச் சோதனையின்போது சக்கரங்கள் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.