மகாதீர்: போட்டியிட எடுத்த முடிவை ஆதரிக்கிறேன்

மகாதீர்: போட்டியிட எடுத்த முடிவை ஆதரிக்கிறேன்

2 mins read

பெட்டாலிங் ஜெயா: போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில் போட்டியிட திரு அன்வார் இப்ராஹிம் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட திரு அன்வாருக்கு உரிமை இருப்ப தாகவும் அதில் தாம் தலை யிடப்போவதில்லை என்றும் டாக்டர் மகாதீர் கூறினார். "அன்வார் ஹாங்காங்கிலிருந்து என்னைத் தொடர்புகொண்டார். இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் என்னிடம் கூறினார். "பொதுவாக இடைத்தேர்தல் களுக்கான பிரசாரங்களில் நான் ஈடுபடுவதில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். "ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிட அவர் எடுத்த முடிவை ஆதரிப்பதாக அவரிடம் கூறி னேன்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

மலேசியப் பொதுத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து டாக்டர் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கருத்து தெரிவிக்க டாக்டர் மகாதீர் மறுத்துவிட்டார். இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து மலேசிய மக்களிடையே நிலவி வரும் கருத்தை ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் கருத்தில் கொள்ளும் என்றார் டாக்டர் மகாதீர். போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் திரு அன்வார் வெற்றி பெற்றால் அவருக்கு அரசாங்கப் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

தாம் எந்த ஓர் அரசாங்கப் பதவியையும் நாடப்போவதில்லை என்று திரு அன்வார் தெரிவித் திருந்ததாக கெஅடிலான் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளதை டாக்டர் மகாதீர் சுட்டினார். "அன்வாரின் அனுமதியுடன் அறிக்கை வெளியிடப்பட்டது என்று நான் நம்புகிறேன். அன்வாருடனான எனது உறவைப் பொறுத்த வரையில் அது நன்றாகவே உள்ளது," என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

தமக்குப் பிறகு திரு அன்வார் பிரதமராவது ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக டாக்டர் மகாதீர் கூறினார். "செய்த சத்தியத்தை நான் மீறப்போவதில்லை. ஆனால் அவரிடம் எப்போது பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்று எனக்குத் தெரியும். இன்னும் மூன்று ஆண்டுகளில் எனக்கு 95 வயதாகிவிடும்," என்றார் அவர்.