கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத களைவு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்துள்ளனர். இவ்வாண்டு தொடக்கம் முதல் தென்கொரியாவோடும் அமெரிக்காவோடும் இதற்கு முன்னர் மேற் கொண்டிராத சந்திப்புகளை வடகொரியா நடத்தியுள்ளது. இருதரப்பும் பொதுவான நலன்கள் குறித்து மட்டுமே பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட நிலையில், வடகொரியாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடுவராக செயல்படுவதில் தென்கொரியா முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக தென்கொரிய அதிபர் மூனும் அவரது துணைவியார் கிம் ஜாங் சூக்கும் நேற்று காலை பியோங்யாங் சென்றடைந்தனர். அவர்களை கிம் ஜோங் உன்னும் அவரது துணைவியார் ரி சோல் ஜூவும் வரவேற்றனர். சந்தித்த உடனேயே இரு தலைவர்களும் கைகுலுக்கி கட்டி அணைத்துக்கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் தென்கொரிய அதிபர் ஒருவர் வடகொரியாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை எனத் தெரி விக்கப்பட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவமற்ற எல்லையில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தொடங்கி, இரு தலைவர்களும் மூன்றாவது முறையாக சந்தித்துள்ளனர். 1953ஆம் ஆண்டில் கொரியப் போர் முடிவுக்கு வந்தாலும், அதன் தொடர்பில் எந்தவோர் அமைதி உடன்பாடும் எட்டப்படவில்லை. தற்போதைய சந்திப்பில், இரு நாட்டுத் தலைவர்களும் அணு ஆயுத களைவுக்கான நடைமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் தென்கொரியத் தரப்பில் இரு இலக்குகள் உள்ளன.
இரு கொரியாக்களுக்கு இடையில் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஒன்று. அணுவாயுத களைவு விவகாரத் தில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் நடுவராகச் செயல்படுவது என்பது மற்ற ஒன்று. இதில் கடந்த ஏப்ரல் மாதம் இரு கொரியத் தலைவர்கள் சந்தித்ததே முக்கியமானதொரு நிகழ் வாக அமைந்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, அணுவாயுத களைவு தொடர்பாக நடை முறைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதில் அதிபர் மூன் முன்னேற்றம் காண்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.
பியோங்யாங் சென்றுள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு (இடது) வழிநெடுக வடகொரிய மக்கள் மலர்க்கொத்து ஏந்தி வரவேற்பு தெரிவித்தனர். உடன் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். படம்: இபிஏ

