மாஸ்கோ: சிரியாவில் தனது ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு இஸ்ரேலைச் சாடி உள்ளது ரஷ்யா. விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தினாலும் அதிலிருந்த 15 பேரின் மரணத்திற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சிரியா கிளர்ச்சிப் படையினருக்கு எதிரான அரசுப் படைக்கு ரஷ்யா ஆதரவுக்கரம் கொடுத்து வருகிறது. கிளர்ச்சிக்காரர் களுக்கு எதிராகச் செயல்பட ராணுவ விமானங்களை ரஷ்யா அனுப்பி உள்ளது.
சிரியா நாட்டு எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ ஜெட் விமானம் சிரியாவுக்குள் உள்ள ஹிமியனம் விமானப் படைத் தளத்திற்குத் திரும்பிக்கொண் டிருந்த வேளையில் வான்வெளியில் மாயமானது. பின்னர் அந்த விமானத்தை சிரிய அரசுப் படை தவறுதலாகச் சுட்டுவிட்ட தாகத் தெரிய வந்தது. கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் ஏவுகணைகளை நோக்கி சிரியப் படை சுட்டபோது அத்தாக்குதல் தவறுதலாக ரஷ்ய விமானத்தை வீழ்த்திவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, 15 ராணுவ வீரர்கள் மாண்டதற்கு இஸ்ரேல் தற்காப்புப் படை வருத்தம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் அதற்கு முழுப் பொறுப்பு சிரியா அரசாங்கம்தான் என்று டுவிட்டரில் வெளியிடப்பட்ட படையின் அறிக்கை கூறியது.

