மலேசியா: இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்

மலேசியா: இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்

2 mins read

மலேசியாவில் போர்ட் டிக்சன் நாடாளு மன்ற இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி நேற்று அறிவித்தது. பிகேஆர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அன்வார் இப்ராஹிம், அந்தத் தொகுதியில் வெற்றி பெற ஏதுவாக, பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விலகிக்கொண்டதை அடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்டு இருக்கிறது. அம்னோ தலைமையிலான மூன்று கட்சி கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடந்தது என்றும் அதில் அந்த இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி கூறினார்.

"ஒருவரின் அரசியல் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அந்தத் தொகுதி காலியாகி இருக்கிறது. போர்ட் டிக்சன் இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்," என்று ஸாஹிட் செய்தியாளர்களிடம் கூறினார். "அந்தத் தொகுதியில் நடக்கும் தேர் தலில் நாங்கள் எந்தவொரு வேட்பாளரை யும் நிறுத்தமாட்டோம்," என்றார் அவர். மலேசியாவின் நாடாளுமன்றத்தில் 49 இடங்களுடன் ஆகப்பெரிய எதிர்க் கட்சியாக அம்னோ திகழ்கிறது. மற்றொரு கட்சியான பாஸ் கட்சி 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண் டிருக்கிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தில் உள்ள போர்ட் டிக்சன் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் அநேகமாக தான் போட்டியிடாமல் போய்விடக்கூடும் என்று பாஸ் கட்சி புலப்படுத்தியுள்ளது. போர்ட் டிக்சன் தொகுதி இடைத்தேர் தலில் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அன்வார் இப்ராஹிமை வேட்பாளராக நிறுத்துகிறது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் முக்கியமான பெரிய கட்சியாகத் திகழ் கின்ற பிகேஆர், போர்ட் டிக்சனில் அன்வார் வெற்றி பெறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் மொத்தம் 50 உறுப் பினர்களைக் கொண்டிருக்கும். போர்ட் டிக்சன் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 29ல் நடக்கும். வாக்களிப்பு அக்டோபர் 13ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அம்னோவும் பாஸ் கட்சியும் போட்டியிடாமல் போனாலும்கூட அங்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.