கோலாலம்பூர்: மலேசியா, 2027 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கென 69 பில்லியன் ரிங்கிட் (21.63 பில்லியன் வெள்ளி) தொகையை ஒதுக்கியுள்ளது.
அதன் மூலம் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் நலனை மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் தேசியக் கல்வியை வலுப்படுத்துவது இலக்கு என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எல்லா வகையான பள்ளிகளைச் சரிசெய்து சீராக வைத்திருப்பதற்கான இரண்டு பில்லியன் ரிங்கிட்டும் பாழடைந்த நிலையில் உள்ள 682 பள்ளிகளை மேம்படுத்துவதற்கான கிட்டத்தட்ட 1.3 பில்லியன் ரிங்கிட்டும் அடங்கும். அந்நடவடிக்கைகளின் வாயிலாகக் கல்வி வசதிகளில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிராமப்புறங்களுக்கும் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
வல்லுநர்களின் கருத்து
துன் ஹுசேன் ஒன் மலேசியா பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு, பொதுக் கல்வி நிலைய, துணைப்பாட மூத்த விரிவுரையாளரான டாக்டர் நஸ்ரினா முகம்மது யாசின், எங்கிருந்தாலும் மாணவர்களுக்குப் பாதுகாப்பான, கற்றலுக்கு உகந்த சூழல் இருப்பதற்கு இந்த நிதியுதவி வகைசெய்யும் என்று கூறினார்.
“கல்வியில் குறைபாடு என்பது படிப்பில் காணப்படும் தேர்ச்சியில் உள்ள வேறுபாடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது, தகுந்த வசதிகளைக் கொண்ட பாதுகாப்பான, வசதியான சூழலில் கற்றலில் ஈடுபட வழங்கப்படும் வாய்ப்பு சார்ந்ததும்கூட,” என்று அவர் விவரித்தார்.
அதேவேளை, முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 2027ல் கல்விக்குக் கூடுதலாக 2.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பது, மனித ஆற்றலுக்கும் (human capital) தேசத்தின் எதிர்காலத்துக்குமான முக்கிய முதலீட்டைக் குறிக்கிறது என்று புத்ரா மலேசியப் பல்கலைக்கழகத்தின் கல்விப் படிப்புப் பள்ளித் தலைவரான துணைப் பேராசிரியர் டாக்டர் வான் மார்ஸுக்கி ஜாஃபர் கூறினார்.
“ஒவ்வோர் அம்சத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் கண்ணுக்குத் தெரியும் பலன்களாக மாறுவதை உறுதிப்படுத்துவதுதான் அடுத்த கட்டமாகும். குறிப்பாகப் பள்ளிகளின் நிலை, மாணவர்களின் நலன், ஆசிரியர்கள் தரும் ஆதரவு, தரமான கல்வி கிடைப்பது ஆகிய அம்சங்களுக்கு இது பொருந்தும்,” என்று அவர் விளக்கினார்.
