இந்தோனீசியாவில் கரை ஒதுங்கி இறந்த 21 அரியவகைத் திமிங்கிலங்கள்

இந்தோனீசியாவில் கரை ஒதுங்கி இறந்த 21 அரியவகைத் திமிங்கிலங்கள்

2 mins read
34 திமிங்கிலங்கள் மீட்கப்பட்டு படகுகள் மூலம் மீண்டும் ஆழ்கடலுக்குள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டன
1c37dd66-1b2b-4ac2-a980-be918c34f1c3
இந்தோனீசிய மீன்வளம், கடல்சார் நடவடிக்கை அமைச்சின் அதிகாரிகள் கிழக்கு நுசா தெங்காராவில் உள்ள கடற்கரையில் ஒதுங்கி உயிரிழந்த ஓர் திமிங்கிலத்தைச் சோதிக்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் திடீரென ஒதுங்கிய 55 நீள்துடுப்புடைய அரியவகைத் திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்ப அங்குள்ள அதிகாரிகளும் பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை (மார்ச் 9) அப்பகுதியை அடைந்த அந்த நீர்வாழ் பாலூட்டி விலங்கினத்தில் இதுவரை 21 திமிங்கிலங்கள் காயத்தினாலும் நீர்ச்சத்து இழப்பினாலும் மாண்டுவிட்டன.

திங்கட்கிழமை இரவு கடற்கரையோரத்தில் அப்பகுதிவாழ் மக்கள் திமிங்கிலங்கள் ஒதுங்கியதை முதலில் கண்டனர் என்று தேசிய நீர்வளப் பாதுகாப்பு முகவையின் (BKKPN) குப்பாங் வட்டார அலுவலகத் தலைவர் இமாம் ஃபௌவ்ஸி கூறினார்.

“குடியிருப்பாளர்கள் எவ்வளவோ முயன்றும் திமிங்கிலங்களை கடலுக்குள் மீண்டும் அனுப்ப முடியவில்லை. அவை தொடர்ந்து கரையை நோக்கியே நீந்தி வந்தன,” என்று அவர் இந்தோனீசிய ஊடகமான கொம்பாசிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்தார்.

உள்ளூர் மீனவர்கள் விரித்திரிந்த வலைகளில் சில திமிங்கிலங்கள் சிக்கிக்கொண்டன.

கடலின் ஆழமான நீரோட்டம் திமிங்கிலங்கள் கரைஒதுங்கக் காரணமாக இருக்கலாம். குழுவாக கடலில்வாழும் திமிங்கிலங்கள் சில நேரங்களில் ஒரு தலைமை திமிங்கிலத்தின் வழிகாட்டலில் பயணம் செய்யும் தன்மை உடையன. தலைமைத் திமிங்கிலம் கரை ஒதுங்கியதால் மற்றவை அதன்பின் தொடர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காவல்துறையினர், இந்தோனீசிய ராணுவத்தினர், மீட்புப் பணியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலர் பொதுமக்களுடன் இணைந்து இரவு பகலாகத் திமிங்கிலங்களைக் கடலுக்குள் அனுப்பப் போராடிவந்தாலும் அவற்றின் அதிக எடை பெரும் சவாலாக உள்ளது என்றார் திரு ஃபௌவ்ஸி.

இதுவரை மீட்பு பணியாளர்களால் 34 திமிங்கிலங்கள் மீட்கப்பட்டு படகுகள் மூலம் மீண்டும் ஆழ்கடலுக்குள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டன என்று அவ்வட்டார காவல்துறைத் தலைவர் சுபுர் குணாவான் தெரிவித்தார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்