மலேசியாவில் பதின்ம வயதுப் பெண்களை மணமுடிக்கும் ஆசை ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடவர் களிடம் காணப்படுவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. 'மணமகள் இளம்பெண்ணாக இருந்தால் மட்டும் போதும், அவர் சார்ந்திருக்கும் சமயம் ஒரு பொருட்டல்ல' என அவர்கள் தெரிவிப்பதாக பினாங்கு மாநில கொள்கைகளை வரைவதில் பெரும்பங்கு வகிக்கும் பினாங்கு ஆய்வுக்கழகம் கூறுகிறது.
மலேசியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தில் குழந்தை திருமணத் திற்காக 10,240 முஸ்லிம்கள் விண்ணப்பம் செய்திருந்ததாக கழகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் முஸ்லிம் அல்லாதவர்களில் 7,719 ஆடவர்கள் 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பெண்ணை மணமுடிக்க விண் ணப்பித்து இருந்தனர்.
ஆக அதிகமான முஸ்லிம் குழந்தைத் திருமண விண்ணப்பங்கள் சரவாக் மாநிலத்திலிருந்து வந்ததாக மலேசிய ஷரியா நீதித்துறை தெரிவித்தது. அதற்கடுத்த நிலைகளில் கிளந்தான் (1,929), திரங்கானு (924) ஆகிய மாநிலங்கள் இருந்ததாக அது குறிப்பிட்டது. இந்த நிலவரம் 2005ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக் கும் இடைப்பட்ட காலகட்டத்திற் குரியது.

