இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமய நிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ள கிறிஸ்துவப் பெண் ஆசியா பீபியின் கணவர் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவ ரான ஆஷிக் மாஷி பாகிஸ்தானில் தாங்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். அவரின் குடும்ப பாதுகாப்புக் குறித்து அச்சப் படுவதாகவும் காணொளி பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். ஆசியா பீபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானதாக இல்லை என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்து அப்பெண்ணை விடுதலை செய்தது. அவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் வன்முறை போராட்டங்கள் வெடித் தன.
இதனால் சனிக்கிழமை ஆசியாவின் வழக்கறிஞர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். ஆசியா பீபி அவரது பக்கத்து வீட்டினருடன் நடந்த சண்டையில், முகம்மது நபியை அவமதித்துப் பேசியதாக அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு 2010 ஆம் ஆண்டு அவர் குற்றவாளியெனத் தீர்ப் பளிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த ஆசியா பீபி, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

