வாஷிங்டன்: அமெரிக்க-சீன தற்காப்பு அமைச்சர்களும் உயர் நிலை அரசதந்திரிகளும் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தையில் ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிந்த தாகக் கூறப்படுகிறது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பாக நிலவும் ஆழ்ந்த கருத்து வேறுபாடுகளில் இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் முன்னேற்றம் காணப்படும் என்று சீன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சீன நாட்டு உயர் அதிகாரியான யாங் ஜியேசி, தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹ ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவும் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசும் பாதுகாப்பு மற்றும் அரசதந்திர உறவுகள் குறித்து நடத்திய பேச்சுவார்த்தை முக்கியமானதும் ஆக்கபூர்வாமான ஒன்று என்றும் அவர்கள் கருத்துரைத்துள்ளனர். தைவான், தென் சீனக் கடல் விவகாரம் போன்றவற்றில் இரு நாடுகளின் நிலைப்பாடும் வேறு பட்டுள்ளன.
எனினும், இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலியுறுத்தியதாக செய்தித் தகவல்கள் கூறுகின் றன. இரு நாட்டு ராணுவங் களுக்கு இடையேயான போர்ப் பதற்றத்தை தணித்து தொடர்பு களை மேம்படுத்த ஏதுவான முறை ஒன்றை வகுக்க அவர்கள் இணங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது. ஒருபுறம், அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண சீனா கடப்பாடு கொண்டுள்ளதாக சீன உயர் அதிகாரி யாங் கூறியுள்ளார். மறுபுறம், அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் பொம்பியோ, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இவற்றைத் தீர்க்க இருதரப்பு ஒத்துழைப்பு அவசியம் என்று கருத்துரைத்துள்ளார்.

