லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பரவும் காட்டுத் தீக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கலிஃபோர்னியாவின் பேரடைஸ் நகரை காட்டுத் தீ சூழ்ந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நகரம் மற்றும் இதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 200 பேரைக் காணவில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
சிகோ நகரில் கிழக்கில் பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இங்கு மட்டும் பல வீடுகளும் கட்டடங்களும் நாசமான தாகக் கூறப்படுகிறது. இதனால் காட்டுத் தீக்கு இன்னும் பலர் பலியாகக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் கூறினர். கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ பரவும் இடங்களிலிருந்து இதுவரை 250,000 பேர் வெளியேற்றப்பட்டுள்தாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அதிக வெப்பம், பலத்த காற்று இவற்றின் காரணமாக காட்டுத் தீ வேகமாகப் பரவுவதாக தீயணைப்பாளர்கள் கூறு கின்றனர். அனல் காற்றின் தாக்கம் தீயணைப்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர். தண்ணீர் குண்டுகளைப் பயன்படுத்தி காட்டுத் தீயை அணைக்க ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தீயணைப்பு பணியாளர் ஒருவர் கூறினார்.
கலிஃபோர்னியாவின் பேரடைஸ் நகரில் தீயில் பல வீடுகள் நாசமாகின. தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எஞ்சிய உடற்பாகங்களைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

