இஸ்கந்தர் புத்ரி: ஜப்பானைச் சேர்ந்த 21 கிலோவுக்கும் அதிகமான ‘வாக்யு’ வகை மாட்டிறைச்சி, ஜோகூர் பாருவின் சுல்தான் அபுபக்கர் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தேவையான உரிமமின்றி ஜோகூருக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மாட்டிறைச்சியின் மதிப்பு ஏறக்குறைய 18,832 ரிங்கிட் (S$5,660) என ஜோகூர் மலேசிய தனிமைப்படுத்தும், பரிசோதனை சேவைத் துறை இயக்குநர் எடி புத்ரா முகம்மது யூசோஃப் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) முற்பகல் 11.40 மணியளவில் சுங்கத்துறையுடன் நடத்தப்பட்ட கூட்டுப் பரிசோதனையில் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
“பரிசோதனையின்போது, சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் வந்த தனியார் வாகனத்தின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று பெட்டிகளில் வாக்யு வகை மாட்டிறைச்சி இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
“ஏறக்குறைய 21.4 கிலோ எடைகொண்ட அந்த மாட்டிறைச்சி, கால்நடை சுகாதாரச் சான்றிதழும் ஹலால் சான்றிதழும் இன்றி கொண்டு வரப்பட்டது கூடுதல் விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்றார் திரு எடி புத்ரா.
விசாரணைக்கு உதவ, அந்த காரை ஓட்டிய 40 வயது மதிக்கத்தக்க மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.
மலேசிய தனிமைப்படுத்தும், பரிசோதனை சேவைச் சட்டத்தின் 11(1) சட்டப்பிரிவின்கீழ், முறையான அனுமதியின்றி வேளாண் பொருள்களை இறக்குமதி செய்வது குற்றமாகும் என்று திரு எடி புத்ரா எச்சரித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 100,000 ரிங்கிட் வரை அபராதம், அல்லது அதிகபட்சம் ஆறாண்டு சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.