குவெட்டா: துப்பாக்கிக்காரர்கள் குறைந்தது 39 பேரை தென்மேற்கு பாகிஸ்தான் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை வழிமறித்து அவற்றில் இருந்தவர்களை இறங்க வைத்து இறங்கியவர்களின் இனத்தை அறிந்து துப்பாக்கிக்காரர்கள் கொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிவினைவாத, இனவாத வன்முறைக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் போரிட்டு வரும் பகுதியில் இந்தத் தாக்குதல்களைப் போராளிகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட அறிக்கை ஒன்றில், ‘பலூச் விடுதலை ராணுவம்’ என்ற பிரிவினைவாதப் போராளிக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
பஞ்சாப்புடன் பலுசிஸ்தானை இணைக்கும் நெடுஞ்சாலை ஒன்றில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், வேன்கள் ஆகியவற்றை 30 முதல் 40 பேர் ஒவ்வொன்றாக நிறுத்தியதாகவும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மூத்த அதிகாரி திரு நஜிமுல்லா கக்கார் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் தொழிலாளர்கள் என்றும் இருவர் துணை ராணுவப் படையினர் என்றும் அவர் கூறினார்.
அண்மைய ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிந்தி சமூகங்கள் மீது பலூச் பிரிவினைவாதிகள் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டு எரிசக்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இதேபோன்று ஏப்ரல் மாதம் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் 11 பஞ்சாப் தொழிலாளர்கள் பேருந்து ஒன்றிலிருந்து கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தமது ஆழ்ந்த சோகத்தைத் தெரிவித்துக்கொண்டதுடன் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்தார்.