ஒட்டிப் பிறந்த இரட்டையரான லுபிட்டா ஆன்ட்ரேட்டும் கார்மன் ஆன்ட்ரேட்டும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் உடலைப் பகிர்ந்து வந்துள்ளனர். மலையைப் போன்ற சவால்கள் இருந்தாலும் வாழ்வை மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் வாழ இவர்கள் தீர்மானத்துடன் உள்ளனர்.
உடலின் மேல் பகுதியில் ஒட்டிப்பிறந்த இந்த 22 வயது சகோதரிகள், ஒரே அடி வயிற்று எலும்பையும் இனப்பெருக்க அமைப்பையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
தங்கள் இருவருக்கும் வெவ்வேறு குணநலன்கள் இருந்தாலும், சிறந்த குழுவினராக விளங்குவதாக அமெரிக்க ஊடகமான டுடேயிடம் இச்சகோதரிகள் கூறினர்.
எடுத்துக்காட்டாக, வலது காலின் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் கார்மன், வாகனம் ஓட்டுவதைப் பார்த்துக்கொள்கிறார். வழிகாட்டும் பொறுப்பை லுப்பிட்டா கவனித்துக்கொள்கிறார்.
குழந்தைகளாக இருந்தபோது மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு இருவரும் இடம்பெயர்ந்தனர்.
டேட்டிங் செயலியில் சந்தித்த தம் காதலன் டேனியல் மெக்கொர்மேக்கை இரண்டரை ஆண்டுகளாக தாம் காதலித்து வருவதாக கார்மன் சொன்னார். லுபிட்டா எவரையும் காதலிக்கவில்லை.
"நான் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற உண்மையை நான் ஒருபோதும் மறைத்தது இல்லை. ஆனால், அதற்குப் பல்வேறு ஆண்களிடமிருந்து நூதனமான கேள்விகளும் வரும்.
"மற்றவர்களிடமிருந்து டேனியல் வேறுபட்டவர் என்பதைத் தொடக்கத்திலிருந்தே நான் அறிந்தேன். ஏனெனில், எனது நிலை பற்றிய கேள்வியை அவர் கேட்டதே இல்லை," என்று கார்மன் சொன்னார்.
நிச்சயதார்த்தம் செய்துகொள்வது பற்றி டேனியல்-கார்மன் தம்பதியர் யோசித்து வருகின்றனர். ஆனால், முதலில் ஒன்றாகச் சேர்ந்து வாழ அவர்கள் விரும்புகின்றனர்.
"டேனியலுக்கும் எனக்கும் பிள்ளைகள் என்றால் அலாதிப் பிரியம். ஆனால், நான் கர்ப்பமடையக்கூடாது. எங்களுக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்' பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எடுத்துவரும் சுரப்புநீர் தடுப்பான், மாதவிடாய் ஏற்படுவதைத் தடுக்கிறது," என்றார் கார்மன்.
தாங்கள் சிறு வயதாக இருந்தபோது தங்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சையை தங்கள் பெற்றோர் பரிசீலித்ததாக இந்த இரட்டையர் கூறினர். ஆனால், அதில் அதிக ஆபத்து இருந்ததால் தங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்று இவர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் பல்வேறு உடலுறுப்புகளைப் பகிர்வதால், அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தாங்கள் இறந்துவிடக்கூடும் அல்லது கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுவிடக்கூடும் என்று லுபிட்டா சொன்னார்.
வளரும் பருவத்தில் இந்த இரட்டையர்கள் பல்வேறு கேலி, கிண்டல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போதும் அவற்றை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.
சவால்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை ரசித்து வாழ்வதிலிருந்து இவர்கள் ஒதுங்குவதில்லை. திரையரங்குகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் செல்வது, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

