ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடந்த மாபெரும் பேரணியில் பழமைவாத இந்தோனீசிய முஸ்லிம்கள் ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர். இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடை பெறவுள்ள வேளையில் இத்தகைய மாபெரும் பேரணி நடந்துள்ளது. கடினப்போக்கு கொள்கையை ஆதரிக்கும் இஸ்லாமிய குழுக்கள் நேற்று நடந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. அடுத்த ஆண்டு தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவை எதிர்த்துப் போட்டியிடவுள்ள முன்னாள் ராணுவ உயர் அதிகாரி பிரபோவோ சுபியாண்டோ நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பேரணியில் கலந்துகொண்ட வர்களில் பலர் வெள்ளை நிற உடை உடுத்தியிருந்ததுடன் கைகளில் இஸ்லாமியக் கொடியை வைத்திருந்தனர். பேரணியின்போது வன்முறை மூளாமல் இருக்க ஜகார்த்தாவில் நேற்று போலிசார் குவிக்கப்பட் டிருந்தனர். இருப்பினும் நேற்றைய பேரணி அமைதியாக நடந்ததாக கூறப்பட்டது. 2016ஆம் ஆண்டு பிற்பகுதியில் அப்போதைய ஜகார்த்தா ஆளுநர் பசுகி புர்ணாமா பதவி விலகக் கோரி பழமைவாத இந்தோனீசிய குழுக்கள் மாபெரும் பேரணி நடத்தின. அதனால் அங்கு சமய, அரசியல் பதற்றம் அதிகரித் திருந்தது. சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் புர்ணாமா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவின் அப்போதைய ஆளுநர் பசுகி புர்ணாமாவுக்கு எதிராக இந்தோனீசிய பழமைவாத குழுக்கள் நடத்திய மாபெரும் பேரணியை நினைவுகூரும் வகையில் நேற்று ஜகார்த்தாவில் மிகப் பெரிய பேரணி நடந்தது. பேரணியில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். படம்: இபிஏ

