வாஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அர்ஜெண்டினாவில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டு அமெரிக்கா திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு டிரம்ப் இவ்வாறு கூறினார். 2019ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தாங்கள் இருவரும் சந்திக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்களுக்கு இடையில் தற்போது ஆழமான நட்புறவு நீடிப்பதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவுக்கு வருகையளிக்குமாறு திரு கிம்முக்கு அழைப்பு அனுப்பவிருப்பதாகக் கூறினார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த டிரம்ப்-கிம் சந்திப்புக்குப் பின்னர் அவ்விரு தலைவர்களுக்கு இடையே நட்புறவு நிலவுகிறது. கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற இடமாக மாற்ற திரு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் ஆர்வம் கொண்டுள்ளனர்.

