ஊழல்: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் கவலை

ஊழல்: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் கவலை

2 mins read
20e43bb1-abca-4c74-a098-452d4b117560
-

ஊழல் மக்களிடையே பொதுவான ஒரு பழக்கமாகி வருவதாகக் கூறி மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது வருத்தம் தெரிவித்து இருக்கிறார். ஊழல் பழக்கவழக்கத்தால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிடக் கூடியவர்களாக மக்கள் ஆகிவருவது தமக்குக் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார். சமூகத்தில் பரவிவரும் ஒரு கலாசாரத்தின் அங்கமாக இடம்பெறும் ஊழல் கெட்டப்பழக்கம் என்று அவர் வர்ணித்தார். எப்போதுமே அனைத்துலக சமூகத்தில் இந்தப் பாதகச் செயல் இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மலாய் மொழியில் ஊழல் என்ற வார்த்தை இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்றும் இருந்தாலும் சமூகத்தில் ஊழல் காரியங்களை வேரூன்ற வைக்கும் செயல்கள் அடிக்கடி இடம்பெற்றுவருவ தாகவும் அவர் தெரிவித்தார். ஊழல் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளும் சமூகம் அது குறித்து வெட்கப்படுவதாகத் தெரியவில்லை என்று மலேசிய பிரதமர் chedet.cc என்ற தனது இணையத்தள பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஊழல் கெட்டப் பழக்கம், மோசமான பழக்கம் என்றே மக்கள் பொதுவாகக் கருதுகிறார்கள். இருந்தாலும் ஊழல் செயல்கள் சட்டத்திற்கும் சமயத்திற்கும் புறம் பானது என்பதால் அத்தகைய காரியங்களில் ஈடுபடுவோர் அதை மூடி மறைத்துவிடுகிறார்கள் என்றார் டாக்டர் மகாதீர். ஊழலை பொதுவான, பகிரங்க மான ஒரு நடைமுறையாக சமூகம் ஏற்றுக்கொள்ளும்போது அத்தகைய காரியங்களில் ஈடுபடுபவர்கள் அதை ஓர் அவமானச் செயலாகக் கருதுவதில்லை.

பணமே ராஜாவாக இருக்கும் ஒரு சமூகத்தில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், குறிப்பாக மலாய்க்காரர் களிடையே வாழ்க்கை மற்றும் கலாசாரத் தின் ஓர் அங்கமாக ஆகிவிட்டதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஊழல் பேர்வழிகளால் தேசிய கௌரத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறது. சமூகத்திற்கும் நாட்டிற்கும் கெடுதல்கள் ஏற்படுகின்றன என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.