குவைத் சிட்டி: வளைகுடா நாடான குவைத்தில் நச்சுச் சாராயம் அருந்தி மாண்டோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துவிட்டது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
கிட்டத்தட்ட 160 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலர் மலையாளிகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாண்டவர்களில் பலரும் இந்தியர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் என்று அம்மாநில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வருவோரில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் குவைத்திற்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிறந்த மருத்துவக் கவனிப்பு கிடைப்பதை உறுதிசெய்ய குவைத் சுகாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்தத் துயர நிகழ்வு கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) நேர்ந்தது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அந்த நச்சுச் சாராயத்தை அருந்தியதை அடுத்து, வெளிநாட்டு ஊழியர்கள் பலரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அம்மதுவை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் வெளிநாட்டினர் என்று குவைத் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களில் 21 பேர் கண்பார்வையை முழுவதுமாக அல்லது பகுதியளவு இழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தோரும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.