சோல்: குப்பைப் பையில் கிடந்த 25 மில்லியன் வொன்னை (S$23,800) எவரும் உரிமை கோராததால் அதனைக் கண்டெடுத்தவரிடமே அப்பணம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடந்தது.
அறுபது வயதைக் கடந்த ஆடவர் ஒருவர் இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி அங்குள்ள குடியிருப்புப் பகுதி அருகே பழைய துணிகளைச் சேகரித்தார்.
அப்போது, குப்பைப் பை ஒன்றில் துணிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 மில்லியன் வொன் மதிப்புள்ள ஐந்து பணக்கட்டுகளை அவர் கண்டெடுத்தார்.
உடனடியாக அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் விரல்ரேகைகளையும் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளையும் ஆய்வுசெய்தனர்; அப்பகுதியிலுள்ள வீடுகளிலும் விசாரணை மேற்கொண்டனர்.
அத்துடன், காணாமல்போன பொருள்கள் தொடர்பான அரசின் இணையத்தளத்திலும் உள்ளூர் நாளிதழிலும் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருப்பினும், ஆறு மாதங்களாகப் பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. தென்கொரியச் சட்டப்படி, அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்களுக்குள் உரியவர் வராவிட்டால் அப்பணம் கண்டெடுத்தவர்க்கே சொந்தமாகும்.
காலக்கெடு முடிந்ததால், வரிகள், நாளிதழ் அறிவிப்புக் கட்டணமாக 5.77 மில்லியன் வொன் பிடித்தம் போக, எஞ்சிய 19.23 மில்லியன் வொன் பணம் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த ஆடவரிடமே காவல்துறை ஒப்படைத்தது.
அப்பணத்திற்கும் குற்றச்செயல்களுக்கும் தொடர்பில்லை என்பதையும் காவல்துறை உறுதிப்படுத்தியது.
