தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி

2 mins read
f800b4fd-c200-488d-8f9d-7e9c687644a5
பாகாங்கின் பெந்தோங் நகருக்கு அருகே ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். - படம்: மலேசியத் தீயணைப்பு, மீட்புத் துறை
multi-img1 of 2

ஜோகூர் பாரு: நோன்புப் பெருநாளுக்கு முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 239 சாலை விபத்துகள் நேர்ந்ததாக மாநிலக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்துள்ளார்.

அவற்றுள் இரு வேறு விபத்துகளில் மொத்தம் நால்வர் உயிரிழந்தனர்.

விபத்து விகித அதிகரிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “பொதுமக்கள் பொறுமை காக்குமாறும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்துகிறோம். அதன்மூலமே விபத்துகளைத் தவிர்க்க முடியும்,” என்று திரு குமார் கூறியுள்ளார்.

ஜோகூர் காவல்துறைத் தலைமையகத்தில் உள்ள துங்கு லக்சமனா அப்துல் ஜலீல் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (மார்ச் 31) நடந்த காவல்துறைத் தலைவரின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலின்போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜோகூர் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் பாலம் உள்ளிட்டவற்றின் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோராயமாக 30,000 வாகனங்கள் ஜோகூருக்குள் நுழைந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இதுவரையிலும் போக்குவரத்து நெரிசல் எதுவும் ஏற்படவில்லை. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லேசான நெரிசல் ஏற்பட்டது. ஆயினும், இன்று காலையில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சீராக உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

போக்குவரத்துப் புலனாய்வு, அமலாக்கத் துறையினர் 1,998 பேர் உட்பட 4,000 அதிகாரிகளும் ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் வெளியிலிருந்து ஏறத்தாழ இரண்டு மில்லியன் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அவர் கூறியிருந்தார். வார நாள்களைக் காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாகாங் மாநிலத்தின் பெந்தோங் நகருக்கு அருகே ஞாயிறன்று ஒரு லாரியும் நான்கு கார்களும் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர்; நால்வர் காயமுற்றனர்.

கோலாலம்பூர் - காராக் விரைவுச்சாலையில் நேர்ந்த அவ்விபத்தில் லாரி ஓட்டுநரும் காயமுற்றார். அவர் நான்கு நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்