மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் இல்லத்துக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு: காவல்துறைத் தலைவர்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் இல்லத்துக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு: காவல்துறைத் தலைவர்

படம்: ராய்ட்டர்ஸ்

28 Sep 2026 - 2:38 pm

1 mins read

கோலாலம்பூர்: ஜாலான் லங்காக் டுதாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் இல்லத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து நீடிக்கும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபடில் மர்சுஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தரவு கிடைத்ததும் உடனடியாகப் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் அடுத்தகட்ட உத்தரவுகள் வரும் வரை அந்தப் பாதுகாப்பு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடனே பாதுகாப்பை அமல்படுத்தியிருக்கிறோம். அது, திங்கட்கிழமை (செப்டம்பர் 28) வரையில் தொடரும், அடுத்தகட்ட உத்தரவுகள் வரும் வரை 24 மணி நேரப் பாதுகாப்பை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 28ஆம் தேதி கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

நஜீப்பின் இல்லத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பில் செந்தூல் மாவட்டக் காவல்துறை, கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், புதிய கோலாலம்பூர் சிறப்புப் பிரிவுத் தலைவராக ஷைதாத்துல் அக்மர் முகமட் நூர் நியமிக்கப்பட்டிருப்பது காவல்துறை தலைமைத்துவத்தின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது என்றார்.

“நாளுக்கு நாள் மாறிவரும் பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியில் தலைநகரின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காப்பதில் சிறப்புப் பிரிவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநஜிப் ரசாக்காவல்துறைகோலாலம்பூர்