கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரக் கண்காணிப்பு, அமலாக்கம் எனப் பாதுகாப்பை வலுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேஎல் சென்ட்ரல், மஸ்ஜித் ஜாமெக் ரயில் நிலையம், பாசார் செனி, துன் ரசாக் எக்ஸ்சேஞ் போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபதில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் சுற்றுக்காவலோடு நின்றுவிடாது, நவீன கண்காணிப்புப் படக்கருவிகள் நிறுவப்பட்டு, பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“24 மணி நேரக் கண்காணிப்பும் பரந்த அளவிலான நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடும் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த எங்களுக்கு உதவும்,” என்று ஆணையர் ஃபதில் குறிப்பிட்டார்.
தேவையான கருவிகளை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்தி வருவதாகவும் வரும் காலங்களிலும் பாதுகாப்புத் தேவைகளை மதிப்பிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
மற்ற முக்கிய உலக நகரங்களில் இருப்பது போன்ற சிசிடிவி கண்காணிப்பு ஏற்கெனவே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆயினும், அதனை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் வேண்டும் என்றும் திரு ஃபதில் சொன்னார்.
கேஎல் சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) நேரில் சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் மிக முக்கியமான பயண இடைமாற்றத் தளங்களில் ஒன்றாக கேஎல் சென்ட்ரல் திகழ்கிறது என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“முதன்மையான ரயில் போக்குவரத்து நடுவமான பின்னர், கேஎல் சென்ட்ரல் கோலாலம்பூரில் மக்கள்தொகை நெருக்கம் மிக்க, பரபரப்பாக இயங்கும் பகுதியாகிவிட்டது. மற்ற பகுதிகளுக்குச் செல்ல பயணிகள் இங்கு திரள்வதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கும் மிகுந்த முன்னுரிமை வழங்குகிறோம்,” என்று திரு ஃபதில் விவரித்தார்.
உச்ச வேளைகளான காலை 7 மணிமுதல் 9 மணிவரையும் மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையும் கேஎல் சென்ட்ரல் நிலையம் வழியாக நாள்தோறும் இரண்டு மில்லியன் பேர் பயணம் செய்கின்றனர்.