படகில் ஏற முயன்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 24 பேர் மரணம்

படகில் ஏற முயன்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 24 பேர் மரணம்

1 mins read
06ec42b1-34cf-4a05-a998-23fb9d57d95b
ஆற்றிலிருந்து ஆடவர் ஒருவரின் உடலை மீட்கும் மீட்புப் பணியாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

டாக்கா: பங்ளாதேஷில் ஏறக்குறைய 40 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று புதன்கிழமை (மார்ச் 25) படகில் ஏற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து ஏறத்தாழ 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்பாரி மாவட்டம், தௌலத்டியா என்ற இடத்தில் புதன்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. படகில் ஏறுவதற்காக அதை அணுகியபோது கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து, ஆற்றுக்குள் தலைகீழாகக் கவிழ்ந்து கிட்டத்தட்ட 9 மீட்டர் ஆழத்தில் மூழ்கியதாகக் காவல்துறையும் தீயணைப்பு, குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

அப்பேருந்திலிருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி தல்ஹா ஜாசிம் கூறினார். இறந்தவர்களில் ஆறு ஆண்கள், 11 பெண்கள், ஐந்து சிறுவர்கள் அடங்குவர்.

“இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்கப்பட்ட பிறகு உயிரிழந்த இரண்டு பெண்களும் அவர்களில் அடங்குவர்,” என்றார் திரு தல்ஹா.

மீட்புப் பணிகளில் நான்கு தீயணைப்புப் பிரிவினரும் 10 முக்குளிப்பாளர்களும் ஈடுபட்டனர். ராணுவம், காவல்துறை, கடலோரக் காவல்படையுடன் உள்ளூர் அதிகாரிகளும் அவர்களுக்கு உதவினர்.

காணாமல்போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால், மரண எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பங்ளாதேஷில் சாலை மற்றும் படகு விபத்துகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்