இந்தோனீசியத் தொழிற்சாலைத் தீவிபத்தில் 24 பேர் மரணம்

இந்தோனீசியத் தொழிற்சாலைத் தீவிபத்தில் 24 பேர் மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 2:49 pm

1 mins read

ஜகார்த்தா: கடந்த வார இறுதியில் இந்தோனீசியாவின் செராங் ரீஜென்சியில் உள்ள சிக்கண்டேயில் அமைந்துள்ள ஒரு உணவுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது.

யுனைடெட் ஃபேமிலி ஃபுட் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தத் தொழிற்சாலையில் சனிக்கிழமை (நவம்பர் 21) மாலை தீ மூண்டது.

அந்த விபத்தில் 24 பேர் மாண்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏறக்குறைய 30 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

தொழிற்சாலையின் பாதுகாப்பு நடைமுறைகள் மதிப்பிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

விபத்து தொடர்பில் தொழிற்சாலையின் தலைமை நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து நேர்ந்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிந்த கட்டடத்தின் உறுதித்தன்மை குறைந்துவருவதால் மீட்பாளர்களுக்குப் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்தது.

இதுவரை உடல் பாகங்கள் அடங்கிய 24 பைகளை மீட்பாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

தீவிபத்து தொடங்கி 12 மணிநேரத்திற்கும் மேலாகப் பல பகுதிகளில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்த 15 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

காவல்துறை, ராணுவம், இந்தோனீசியச் செஞ்சிலுவைச் சங்கம், தொண்டூழியர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்