கனடா: காரிலிருந்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை

கனடா: காரிலிருந்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை

படம்: வருண் சௌத்ரி / எக்ஸ்

14 Apr 2024 - 5:51 pm

2 mins read

வான்கூவர்: கனடாவின் தெற்கு வான்கூவரில் காரிலிருந்த 24 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உள்ளூர்க் காவல்துறை தெரிவித்தது.

சிராக் அந்தில் என்ற இந்த இந்திய இளையர் காருக்குள் மாண்டுகிடந்த நிலையில் காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

“இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்தபோது சிராக் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதன் தொடர்பில் இன்னும் எவரும் கைதுசெய்யப்படவில்லை. விசாரணை தொடர்கிறது,” என்று காவல்துறை விளக்கியது.

இதனையடுத்து, சிராக்கின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுசெல்ல வெளியுறவு அமைச்சின் உதவியை நாடியுள்ளதாக ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) ஊடகம் வழியாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் வருண் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

சிராக்கின் உடலை இந்தியாவிற்குக் கொண்டுவர ‘கோஃபண்ட்மி’ எனும் பொது நிதிதிரட்டுத் தளம் வழியாக அவருடைய குடும்பத்தினர் நிதி திரட்டி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, சிராக் கனிவானவர் என்று இந்தியாவின் ஹரியானாவில் வசிக்கும் அவருடைய சகோதரர் ரோமித் அந்தில் கூறினார்.

“எங்களுக்குள் நெருக்கமான உறவு இருந்தது. ஒவ்வொரு நாளும், பகலிலும் இரவிலும் நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம். இச்சம்பவம் நிகழ்வதற்குமுன் அவருடன் பேசினேன். அவர் மகிழ்ச்சியானவர்; எப்பொழுதும் யாருடனும் சண்டை போடவே மாட்டார். அவர் மிகவும் பண்பான மனிதர்,” என்று ‘சிட்டி நியூஸ்’ ஊடகத்திடம் ரோமித் சொன்னார்.

கடந்த 2022 செப்டம்பரில் சிராக், வான்கூவருக்குச் சென்றார். கனடா மேற்கு பல்கலைக்கழகத்தில் ‘எம்பிஏ’ படித்த அவருக்கு அண்மையில்தான் வேலை அனுமதிச்சீட்டு கிடைத்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்