மலேசியாவில் பரிசோதிக்கப்பட்ட 31 பேரில் 25 பேருக்கு குரங்கம்மை இல்லை

மலேசியாவில் பரிசோதிக்கப்பட்ட 31 பேரில் 25 பேருக்கு குரங்கம்மை இல்லை

2 mins read
e9d7b499-b35d-41f4-a748-cbb00906bcd1
2023 டிசம்பரிலிருந்து தற்போது வரை மலேசியாவில் புதிதாக யாருக்கும் குரங்கம்மை ஏற்படவில்லை என்று ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது (நடுவில்) தெரிவித்தார். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசியாவில் 31 பேருக்குக் குரங்கம்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 25 பேருக்குக் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய அறுவர் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களது மருத்துவச் சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மலேசியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்றும் இதுவரை ஒன்பது பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறினார்.

2023 ஜூலை 26ஆம் தேதி முதல் பாதிப்பு பதிவானது. கடைசி பாதிப்பு அதே ஆண்டு நவம்பரில் பதிவானது.

“2023 டிசம்பரிலிருந்து தற்போது வரை மலேசியாவில் புதிதாக யாருக்கும் குரங்கம்மை ஏற்படவில்லை,” என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

அண்டை நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமது அமைச்சு உடனடியாக மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

மலேசியாவின் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனைகளை நடத்த பத்து ஆய்வுக்கூடங்கள் தயார்நிலையில் உள்ளன. இரண்டு தனியார் ஆய்வுக்கூடங்களும் நெருக்கடிநிலை தயார்நிலை, நடவடிக்கை மையமும் அவற்றில் அடங்கும்.

“குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்ட அண்டை நாடுகளிலிருந்து மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பலர் மலேசியாவுக்கு வருகின்றனர். பொது, தனியார் சுகாதார நிலையங்களுக்கு குரங்கம்மை தொடர்பான சுற்றறிக்கைகளை அடிக்கடி அனுப்பிவைக்கிறோம்,” என்று அமைச்சர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.

சில ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு மிகக் கடுமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி குரங்கம்மைத் தொற்றை உலகளாவிய பொதுச் சுகாதார நெருக்கடிநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்