வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ ஆகிய இரு நாடுகள் மீதான 25 விழுக்காடு வரியைத் தவிர்ப்பதற்கான வழியில்லை என்று மார்ச் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பு கூறினார்.
திரு டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
பிற்பகலில் பங்கு விலைகள் சற்று சரிந்தன. மெக்சிகோவின் பிசோ, கனடாவின் டாலர் ஆகியவையும் சரிவைக் கண்டன.
அமெரிக்காவின் வரி விதிப்பு செவ்வாய்க் கிழமையிலிருந்து ( மார்ச் 4) அமலுக்கு வருகிறது.
“இரு நாடுகளுக்கும் வரி விதிப்பு நிச்சயம். அமெரிக்காவில் கார்களையும் இதரவற்றையும் உற்பத்தி செய்தால் அவர்களுக்கு வரி இருக்காது,” என்று வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவுக்கு சட்டவிரோதப் போதைப் பொருள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் வரை இரு நாடுகளுக்கும் வரியைத் தவிர்க்கும் வாய்ப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடியாக விதிக்கப்படும் வரி விதிப்பு ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட வரி 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதாவது சீனாவுக்கான வரி இரண்டு மடங்காகியுள்ளது.
சட்டவிரோதப் போதைப் பொருள் பிரச்சினைக்கு சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று டிரம்பு கூறியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் வரி விதிப்புக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனாவின் வர்த்தக அமைச்சு சூளுரைத்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதால் சீனா பதிலுக்கு அமெரிக்க பொருள்களுக்கு வரி விதித்துள்ளது.
இதனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய இயந்திரங்கள் கொண்ட கார், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.