வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்ததால் அதிலிருந்து 250 மில்லியன் தேனீக்கள் தப்பிப் பறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கனடா எல்லைக்கு அருகிலுள்ள சாலையில் கவிழ்ந்த அவ்வாகனத்தில் ஏறத்தாழ 31,750 கிலோ எடையுள்ள 70,000 தேன்கூடுகள் இருந்தன.
அதனைத் தொடர்ந்து, தேனீக்களை வளர்ப்பவர்கள் பலர் அவசரகால உதவி அதிகாரிகளுக்குக் கைகொடுத்தனர்.
“கவிழ்ந்த வாகனத்திலிருந்து முடிந்த அளவிற்குத் தேனீக்களைப் பாதுகாப்பதுதான் நோக்கம்,” என்று வாட்காம் கவுன்டி காவல்துறை அலுவலகம் தெரிவித்தது.
மீட்புப் பணிகள் முடிவடையும்வரை விபத்து நேர்ந்த சாலைப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
“250 மில்லியன் தேனீக்கள் பறந்துவிட்டன. தேனீக்கள் கொட்டுவதிலிருந்து தப்பிக்க விபத்து நேர்ந்த பகுதியைத் தவிர்த்திடுங்கள்,” என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட 25 தேனீ வளர்ப்பாளர்கள் மீட்புப் பணியில் கைகொடுத்ததாகச் சமூக ஊடகம் வழியாகக் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
“காலை நேரத்திற்குள் பெரும்பாலான தேனீக்கள் தங்களது தேன்கூடுகளுக்குத் திரும்பக்கூடும்,” என்றும் அப்பதிவில் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.
கவிழ்ந்த வாகனத்தைச் சுற்றிலும் ஏராளமான தேனீக்கள் மொய்த்தபடி இருந்ததைக் காவல்துறை பகிர்ந்த காணொளியில் காண முடிந்தது.

