துபாயில் வாகன ஓட்டுநராகப் பணிபுரியும் இந்தியரான அஜய் ஒகுலா, 'எமிரேட்ஸ் குலுக்கல்' சீட்டை முதன்முறையாக வாங்க முடிவெடுத்தபோது, அதில் பரிசுப் பணம் கிடைக்கும் என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
15 மில்லியன் திர்ஹம் (ரூ.33 கோடி) மெகா பரிசை வென்றுள்ள அவர், "ஜாக்போட் பரிசை வென்றிருப்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை," என்று அவர் கூறியதாக கலீஜ்டைம்ஸ் செய்தித்தளம் குறிப்பிட்டது
தொடக்கத்தில், தாம் வென்ற தொகை 15,000 திர்ஹம் என்று அஜய் நினைத்தார். ஆனால் 15 மில்லியனில் எத்தனை சைபர் உள்ளது என்பதைகூட அவரால் எண்ண முடியவில்லையாம்.
வாழ்வாதாரத்தைத் தேடி தென்னிந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு சென்ற அஜய், 31, தற்போது நகைக்கடை ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் ஈட்டும் மாதச் சம்பளம் 3,200 திர்ஹம்.
"என்னுடைய நண்பர் அண்மையில் எமிரேட்ஸ் குலுக்கலில் 7,777 திர்ஹம் வென்றார். அவரது கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதால், இந்தக் குலுக்கல் உண்மையானது என்பதை நம்பினேன்," என்று தமது முதல் முயற்சிக்குப் பின்னால் உள்ள கதையைப் பகிர்ந்தார்.
அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க அவருடைய முதலாளிகளும் ஊக்குவித்தனராம். குலுக்கல் நடைமுறை எப்படி நடக்கிறது என்பதைகூட அவர்கள் அஜய்க்கு விளக்கினராம்.
தாம் வென்றுள்ள இவ்வளவு பெரிய பணத்தைக் கொண்டு வீடு ஒன்றைக் கட்டவும் சொந்தமாக கட்டுமான நிறுவனம் ஒன்றைத் தொடங்கவும் அஜய் திட்டமிடுகிறார்.
கனவை நனவாக்குவது ஒருபுறமிருக்க, உதவி தேவைப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டவும் அஜய் உறுதிபூண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
குறைந்த வருமானத்திலும் தமது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வசதி குறைந்தோருக்கு தாம் உதவி வந்துள்ளதாக அஜய் கூறுகிறார்.
"இந்த பரிசுத் தொகையைக் கொண்டு எனது அறக்கட்டளையைக் கட்டியெழுப்ப முற்படுவேன். என் சொந்த ஊரிலும் அண்டை கிராமங்களிலும் அடிப்படைத் தேவைகளை மக்கள் பெற இது உதவும்," என்றார் அஜய்.
குலுக்கல் பரிசை வென்றிருப்பதை, அவரைப்போலவே அவருடைய தாயாராலும் உடன்பிறப்புகளாலும் இன்னமும் நம்பமுடியவில்லையாம்.
"நான் செய்திகளில் இடம்பிடித்துள்ளதால், அவர்கள் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும்," என்றார் அஜய்.


