விமானத்தில் பறப்பது சில வேளைகளில் மனவுளைச்சலாக அமையலாம். அண்மையில் பயணி ஒருவருடன் இண்டிகோ விமானச் சிப்பந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
டிசம்பர் 16ஆம் தேதி இஸ்தான்புல் நகரிலிருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளம் குறிப்பிட்டது.
அந்தப் பயணி 'சேண்ட்விச்' ரொட்டி கேட்டதாகவும் ரொட்டி இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்று விமானச் சிப்பந்தி பயணியிடம் கூறினார்.
ஆனால், கோபமடைந்த அந்த ஆடவர் கத்தியதில் அந்த விமானச் சிப்பந்தி அழுதுவிட்டார்.
தம்முடைய சக ஊழியரை அழ வைத்ததற்காக வேறொரு விமானச் சிப்பந்தி அந்தப் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று டுவிட்டரில் வலம் வந்தது.
"தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், எங்களிடம் குறிப்பிட்ட அளவில்தான் உணவு இருக்கும். உங்களிடம் மரியாதையுடன் பேசுகிறோம். பதிலுக்கு நீங்களும் எங்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும்," என்று அந்த விமானச் சிப்பந்தி கூறினார்.
அதற்கு "வாயை மூடு" என்று அந்த ஆடவர் கத்த, "என்னிடம் இப்படிப் பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் வாயை மூடுங்கள். நான் உங்கள் வேலையாள் இல்லை," என்று அந்தச் சிப்பந்தி கோபத்துடன் சொன்னார்.


