வாஷிங்டன்: அமெரிக்கா செல்வோர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் அந்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்குவதைத் தடுக்கும் நோக்கில் ‘விசா உத்தரவாதத் திட்டத்தை’ (Visa Bond Programme) அமெரிக்கா நிரந்தரமாக்கியுள்ளது.
சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம், வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து நிரந்தர விதிமுறை ஆக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.
பல ஆப்பிரிக்க நாடுகள், பங்ளாதேஷ், நேப்பாளம், பூட்டான் உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
வணிக நிமித்தமாக ‘பி-1’ சுற்றுலாவுக்காக ‘பி-2’ விசாக்களுக்கு விண்ணப்பிப்போருக்கு இத்திட்டம் பொருந்தும். விசா நேர்காணலுக்கு முன்பாக, விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக US$20,000 (S$25,700) வரை உத்தரவாதத் தொகையாகச் செலுத்த வேண்டும். முன்பு US$5,000 முதல் US$15,000வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இத்தொகை, தற்போது US$10,000, US$20,000 எனக் கூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு விசா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாய்நாடு திரும்புவோருக்கு அல்லது விசா நிராகரிக்கப்படுபவர்களுக்கு தொகை முழுமையாகத் திரும்ப ஒப்படைக்கப்படும்.
மேலும், அமெரிக்காவில் கல்வி, ஆய்வு, மருத்துவப் பயிற்சிகளுக்காக ஜே-1 விசா மூலம் செல்லத் திட்டமிட்டுள்ள பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்களுக்கான விதிமுறைகளையும் அமெரிக்கா அண்மையில் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் அனைத்துலக மாணவர்கள் அங்கேயே வேலை செய்ய விரும்பினால் US$100,000 செலுத்தும் திட்டத்தையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.மேலும், மாணவர் விசா விதிகளிலும் பெரிய மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

