மலாயா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகளில், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 30 பேர் பணியாற்ற சிங்கப்பூருக்கு சென்றுவிடுவதாக அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை முன்னாள் தலைவர் டாக்டர் அடீபா கமாருல்ஸமான் கூறியுள்ளார்.
மலேசியாவில் மருத்துவர்கள், தாதியர், இதர மருத்துவ நிபுணர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சிங்கப்பூருக்கு மருத்துவத் திறனாளர்களை இழக்கும் நிலைமை தொடரும் என்றார் அவர்.
மருத்துவத் துறையில் போதிய பதவிகள் இல்லாதது, புதிய பட்டதாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு தெளிவான பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படாதது, சிறந்த வாய்ப்புகளைத் தேடி பலரும் வெளிநாட்டிற்குச் செல்ல காரணமாக உள்ளது.
ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அளிக்கப்படும் பயிற்சிக்கான செலவு கிட்டத்தட்ட 1 மில்லியன் ரிங்கிட் (S$304,879) ஆனது என்று டாக்டர் அடீபா கூறினார்.
"என்னுடைய இளம் சகாக்களை நான் குறைசொல்லவே மாட்டேன். வாய்ப்புகள் எங்கு இருக்கின்றனவோ, அவற்றைத் தேடித்தான் நானும் செல்வேன்.
"இங்கு பயின்றுவிட்டு பட்டதாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடும் நிலையில், நம்மால் எப்படி உலகத் தரம்வாய்ந்த சுகாதார முறையைக் கட்டியெழுப்ப முடியும்?" என்று அவர் வினவினார்.
மலேசியாவில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்க்கப்படும் இளநிலை மருத்துவர்கள் பலரும், மேற்படிப்பு மேற்கொள்ளத் தெளிவான பாதைகள் போதிய அளவில் இல்லாதது குறித்து குறைகூறியுள்ளனர்.


