பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியான ஷான்ஷி மாகாண லுலியாங் நகரத்தில் உள்ள 4 மாடி கட்டடத்தில் நடந்த தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்து விட்டனர், 63 பேர் கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டு, 51 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரத்துவ ஷின்ஹுவா செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
யுங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் காலை 6.50 மணிக்கு தீ பற்றிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். மீட்புப் பணிகள் நடந்துவருவதாகவும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அந்தத் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கியுள்ளதாகவும் சிசிடிவி தொலைக்காட்சி தெரிவித்தது. காணொளிகளில் தெரிந்த அக் கட்டடம், நிலக்கரி நிறுவனத்தின் தலைமையகம் என்று நம்பப்படுகிறது.
தரமற்ற பாதுகாப்பு, விதிமுறைகள் அமலாக்கத்தில் குறைகள் போன்றவற்றால் சீன தொழில்பேட்டைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பது வழக்கம்.
சீனாவின் வடகிழக்கில், ஜூலையில் பள்ளி உடற்பயிற்சி மையத்தில் கூரைவிழுந்து 11பேர் பலியாயினர். அதற்கு ஒரு மாதத்திற்கு முன், வடமேற்குப் பகுதியில் ஒரு உணவகத்தில் நடந்த வெடிப்பில் 31 பேர் மாண்டனர். இந்நிகழ்வுக்குப் பிறகு நாடுமுழுதும் வேலையிடப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இயக்கங்களை அரசாங்கம் தொடங்கியது.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் தலைநகர் பெய்ஜிங்கில் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் மாடிகளில் இருந்து குதித்துத் தப்பிக்க முயன்றனர். தியான்ஜின் நகரில் உள்ள ரசாயன ஆலையில் 2015ஆம் ஆண்டில் நடந்த பயங்கர வெடி விபத்தில் 165 பேர் உயிரிழந்தனர்.

