வாஷிங்டன்: பிப்ரவரி இறுதியில் ஈரான் போர் தொடங்கியது முதல் விரைவாக நிதி பெறக்கூடிய நெருக்கடி கால வழிமுறைகளை நடைமுறைப்படுத்த உலகின் 27 நாடுகள் முயன்று வருகின்றன.
உலக வங்கியின் நடப்புத் திட்டங்களிலிருந்து விரைவாக நிதி பெறுவது அதன் நோக்கம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
அவசர நிதி உதவி பெறும் ஏற்பாடுகளில் இறங்கியிருக்கும் அந்த நாடுகளின் பெயர்கள், அவை கோரும் நிதியின் அளவு ஆகிய விவரங்கள் அந்த ஆவணத்தில் இல்லை. மேலும், அந்த ஆவணம் தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க உலக வங்கி மறுத்துவிட்டது.
போர் தொடங்கியதிலிருந்து மூன்று நாடுகள் புதிய வழிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மற்றவை இன்னும் அந்த செயல்முறையை நிறைவு செய்து வருவதாகவும் அந்த ஆவணம் காட்டியது.
குறிப்பாக, போரின் பின்விளைவுகளைச் சமாளிக்க உலக வங்கியிடமிருந்து விரைவான நிதி உதவியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கென்யா, ஈராக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

