பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

15 Oct 2026 - 5:41 pm

2 mins read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், வகுப்பறையில் பாடம் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களில் பெரும்பாலானோர் 13 வயதுக்குட்பட்டவர்கள். மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ‘லேடி ரீடிங்’ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோதே உயிரிழந்திருந்தனர். மேலும் 20 பேர் காயங்களுடன் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனையின் பேச்சாளர் முகம்மது ஆசிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம், அந்நகரின் ‘டிர் காலனி’ பகுதியில் அமைந்துள்ள ‘அல்-கைர்’ தனியார் கல்வி நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு அதிகாரி பிலால் ஃபைஸி தெரிவித்தார்.

கட்டடத்தின் மேல் தளத்தின் கூரை, முதல் தளத்தின் கூரை மீது இடிந்து விழுந்ததாகவும், அதன் விளைவாக அந்தக் கூரை வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள்மீது விழுந்ததாகவும் மீட்புப் பணி அதிகாரி ஒருவர் கூறினார்.

மருத்துவ உதவி வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதும், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த, ரத்தக் கறையுடன் காணப்படும் மாணவர்களை வெளியே மீட்டு வருவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளில் பதிவாகியிருந்தன.

“இதுவரை நாங்கள் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து குறைந்தது 45 சிறார்களை மீட்டுள்ளோம்,” என்று மாவட்ட அவசரகால அதிகாரி இப்திகார் கான் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் இன்னும் பல சிறார்கள் புதைந்து கிடப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையே, பள்ளிக்கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிப்பதாக கைபர் பக்துன்க்வா மாநில ஆளுநர் பைசல் கரீம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி ஆலோசகருக்குத் தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும், காயமடைந்த சிறார்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கட்டமைப்பு பாதுகாப்புத் தணிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிந்து, தேவைப்படும் இடங்களில் உடனடியாகச் சரிசெய்தல் நடவடிக்கைகளை எடுக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மேற்கூரைபாதுகாப்புகல்வி