இணையத்தில் பொருள்கள் வாங்கிய 28% தென்கொரியர்கள் தகவல் திருட்டுக்கு ஆளாயினர்

இணையத்தில் பொருள்கள் வாங்கிய 28% தென்கொரியர்கள் தகவல் திருட்டுக்கு ஆளாயினர்

1 mins read
09e2a6b3-0058-4d9d-bc11-15bb0a3f3aea
தென்கொரியத் தலைநகர் சோல். - படம்: லிவ் லைக் இட்ஸூ தி வீக்கெண்ட்
Google News Preferred Icon

சோல்: இணைய வர்த்தகத் தளங்களில் பொருள்களை வாங்கும் தென்கொரியர்களில் கிட்டத்தட்ட 28.1 விழுக்காட்டினர் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சோல் நகராட்சி அரசாங்கம் நடத்திய கருத்தாய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. கருத்தாய்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிடப்பட்டன.

தங்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிடும் என்ற அச்சம் கொண்டுள்ளதாக கருத்தாய்வில் பங்கேற்ற 78 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

இணையத்தில் பொருள்களை வாங்கும்போது ஏற்கெனவே பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பதாக 30.2 விழுக்காட்டினர் கூறினர். கோளாறு உள்ள பொருள்கள், பொருள்கள் தாமதமாக வந்து சேர்வது, போலியான அல்லது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் போன்ற பிரச்சினைகள் அவற்றில் அடங்கும்.

இணையத்தில் பொருள்களை வாங்கும் 1,000 பேரிடம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டிலிருந்து 14ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களில் 41.1 விழுக்காட்டினர், வாடிக்கையாளர் சேவையில் (customer service) அசெளகரியத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்படும் பதில்களில் தாங்கள் திருப்திகொள்ளவில்லை என்று 39.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர். பெரும்பாலான வேளைகளில் செயற்கை நுண்ணறிவு வழங்கும் பதில்கள் ஒரே மாதிரியாக இருக்கும் அல்லது சம்பந்தப்பட்ட விவகாரத்துக்குத் தொடர்பில்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்