நங்காய் நிலநடுக்கத்தில் 298,000 மக்கள் உயிரிழக்கக்கூடும்: ஜப்பான் முன்னுரைப்பு

2 mins read
7687f40c-61bf-4e5d-8314-70aba9c3f1f8
ஜப்பானுக்குத் தெற்கே கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் தூரத்தில் நங்காய் பள்ளத்தாக்கு உள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானின் நங்காய் பள்ளத்தாக்குப் பகுதியில் பேரளவு நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 298,000 மக்கள் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டின் நிலநடுக்கப் பாதுகாப்புப் பணிக்குழு திங்கட்கிழமை (மார்ச் 31) வெளியிட்ட சேத மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்தது.

நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்காக அந்நாடு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக உயிர்ச்சேதங்களின் அளவு குறைந்துள்ளதாக அது கூறியது.

2012ஆம் ஆண்டு வெளியான சேத மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட 10 விழுக்காடு குறைவு என அது சொன்னது.

இருப்பினும், பேரிடர் தடுப்புக்கான அந்நாட்டு அரசாங்கத்தின் 2014ஆம் ஆண்டுக்கான அடிப்படைத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட உயிர்ச்சேதங்களைக் கிட்டத்தட்ட 80 விழுக்காடு குறைக்கும் இலக்கை விட இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பேரிடர் ஏற்படும்போது மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றப் பயன்படுத்தப்படும் உத்திகளையும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளிலும் பெரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை இது காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்படும்போது அபாயகரமான பகுதிகளைவிட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை 12.3 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் அது ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு என்றும் அண்மையில் வெளியான அறிக்கை குறிப்பிட்டது.

ஜப்பானுக்குத் தெற்கே கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் தூரத்தில் நங்காய் பள்ளத்தாக்கு உள்ளது.

நங்காய் பகுதி என்பது பிலிப்பீன்ஸ் கடல் தட்டு உள்ள இடமாகும். இதனால், அங்கே 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டு பேரளவில் நிலநடுக்கம் ஏற்படும். இந்தக் கணக்குப்படி, இன்னும் சராசரியாக 30 ஆண்டுகளில் அந்த நிலநடுக்கம் வந்து ஜப்பானையே உலுக்கிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்