பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிகாமட் நகரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 4.24 மணிக்கு ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது கடந்த 5 நாள்களில் நிகழ்ந்த நாலாவது நிலநடுக்கமாகும் என்பது நினைவுகூரத்தக்கது.
நிலநடுக்கம் சிகாமட்டுக்கு வடகிழக்கே பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் எற்பட்டதாக மலேசியாவின் மெட்மலேசியா என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் ஜோகூரில் உணரப்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிலைமையைத் தான் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
இதற்கு முன்னர், சிகாமட் ஆகஸ்ட் 24, 27, 28 ஆகிய நாள்களில் ரிக்டர் அளவு 2.5லிருந்து 4.1 வரையிலான மூன்று நிலநடுக்கங்களை கண்டதாக மலேசியாவின் ஸ்டார் ஊடகம் கூறியது.