முன்னாள் மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன்மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள்

முன்னாள் மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன்மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள்

2 mins read
9682666b-548e-4976-88d6-e20bb771916c
மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் மலேசிய மனிதவள அமைச்சருமான எம். சரவணன், காவல்துறையினர் சூழ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) முன்னிலை ஆனார். - படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் மலேசிய மனிதவள அமைச்சருமான எம். சரவணன்மீது ஏறத்தாழ S$346,413 (மலேசிய ரிங்கிட் 1.097 மில்லியன்) மதிப்புள்ள தொகையை பெற்றதாக மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) தலைநகரில் உள்ள நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளன.

அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த திரு சரவணன், S$142,112 (மலேசிய ரிங்கிட் 450,000) பிணைத்தொகையுடன் நீதிபதியால் விடுவிக்கப்பட்டார்.

அவர் மனிதவள அமைச்சராக இருந்தபோது, ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களை ஒதுக்கீடு செய்து ஒரு நிறுவனத்துக்கு உதவ அவர் அந்தத் தொகைகளைப் பெற்றுக்கொண்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் அவர்களது வாதத்தில் தெரிவித்தனர்.

பேராக் மாநிலத்தின் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான 58 வயது திரு சரவணன், நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை மறுத்தார்.

அந்த மூன்று குற்றச்சாட்டுகளின்படி, மலேசிய ரிங்கிட் 150,000, மலேசிய ரிங்கிட் 350,000, மலேசிய ரிங்கிட் 597,000 ஆகிய தொகைகளை வெக்டியா ரிசார்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் டான் டெக் லிம் என்பவரின் சார்பில் சையது அமிருல் சையது அகமது என்பவரிடம் திரு சரவணன் பெற்றுக்கொண்டதாக அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

2022ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியும் ஜூலை 7ஆம் தேதி இருமுறையும் அவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேபாங்க் வங்கியின் காசோலை வழியாக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த காசோலை பிறகு ஜாலான் கிளாங் லாமா மேபாங்க் கிளையில் ஒரு நிறுவனத்தின் கணக்குக்கு வைப்புத் தொகையாக வழங்கப்பட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009ன்படி மூன்று குற்றச்சாட்டுகளும் வரையப்பட்டுள்ளன. அதே சட்டத்தின் 24(1) பிரிவின்படி அது குற்றவாளிக்குத் தண்டனைகள் வழங்கவும் அனுமதி அளிக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறையும், ஊழலாகப் பெற்ற தொகையின் ஐந்து மடங்கு மதிப்புள்ள அபராதமும் விதிக்கப்படலாம்.

திரு சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக 2020 முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇந்தியர்காங்கிரஸ்ஊழல் தடுப்பு ஆணையம்ஊழல்நீதிமன்றம்குற்றச்சாட்டு