ஜெனீவா: உலகெங்கும் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளுக்கு எதிரான தடுப்பாற்றலால் பாதிக்கப்பட்ட மூன்று மில்லியன் குழந்தைகள் 2022ஆம் ஆண்டு உயிரிழந்ததாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியாவைச் சேர்ந்த குழந்தைகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டதாகக் குழந்தைகள் சுகாதாரத் துறை வல்லுநர்கள் இருவர் நடத்திய ஆய்வு கூறியது.
தொற்றுநோய் ஏற்படுத்தும் நுண்கிருமிகள், ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் பயனளிக்காத வகையில் உருமாற்றம் அடையும் நிலை ‘ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டென்ஸ்’ (AMR) என்றழைக்கப்படுகிறது.
உலக மக்கள் எதிர்கொள்ளும் ஆகப் பெரிய பொதுச் சுகாதார மிரட்டல்களில் ஒன்றாக அது அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறு பிள்ளைகளிடையே அதனால் ஏற்படும் பாதிப்பை அண்மைய ஆய்வு உணர்த்துகிறது. மூன்று ஆண்டுகளில் இத்தகைய பாதிப்பு பத்துமடங்குக்குமேல் அதிகரித்திருப்பதைப் புதிய ஆய்வு காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்வேறு பாக்டீரியா தொற்றுகளைத் தடுப்பதற்காகப் பயன்படும் ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் சாதாரண சளி, சளிக்காய்ச்சல், கொவிட் போன்ற கிருமித்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கமாட்டா.
அவற்றை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தும்போது பாக்டீரியாக்கள் அந்த மருந்துகளுக்கு எதிரான தடுப்பாற்றலைப் பெறும் நிலை ஏற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
2019 முதல் 2021ஆம் ஆண்டுவரை, இத்தகைய ‘வாட்ச் ஆன்டிபயாடிக்’ மருந்துகளின் பயன்பாடு தென்கிழக்காசியாவில் 160 விழுக்காடும் ஆப்பிரிக்காவில் 126 விழுக்காடும் அதிகரித்ததாகத் தெரியவந்துள்ளது.