கோலாலம்பூர்: மலேசியாவின் டாக்சி துறையைப் புதுப்பிக்க 10 மில்லியன் ($3.17 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
புதிய கார்களுடனும் நவீன முன்பதிவு தொழில்நுட்பத்துடனும் அந்தத் துறையைச் சீரமைப்பது நோக்கம்.
புதிய கார்கள் திறன்மிக்க மலேசிய டாக்சிகளின் புதிய அடையாளத்தை மேம்படுத்தும்; அத்துடன் பல பத்தாண்டுகளாகக் குறைந்த வருமானத்தாலும் பல்வேறு பிரச்சினைகளாலும் தவிக்கும் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும் திரு அன்வார் கூறினார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற தேசிய மடானி டாக்சி புதுப்பிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
மலேசிய டாக்சிகளின் புதிய அடையாளமாக மறுவடிவமைக்கப்பட்ட சிவப்பு நிற செடான் வகை கார்கள் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் வசதி படைத்தவர்கள் பல டாக்சி அனுமதிகளை வைத்திருந்ததை மடானி அரசாங்கம் தடுத்திருப்பதையும் திரு அன்வார் சுட்டினார். இதன் மூலம் ஏழை டாக்சி ஓட்டுநர்களைப் பணக்காரர்கள் சுரண்டும் ஏகபோக உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின்கீழ், ஓட்டுநர்கள் புத்தம் புதிய செடான் கார்களையும் டாக்சி அனுமதிகளையும் பெறுவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் நிதியுதவி வழங்கும்.
புதிய அதிகாரபூர்வ டாக்சியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ‘புரோட்டோன் எஸ்70’ வாகனத்தைப் பற்றியும் திரு அன்வார் பேசினார்.
“உடனடியாக நடப்புக்குவரும் வகையில் மேலும் 10 மில்லியன் ரிங்கிட்டை நான் அங்கீகரிக்கிறேன். இது டாக்சிகளுக்கும் எஸ்70 திட்டத்திற்குமானது,” என்றார் அவர்.
“இன்று நாம் காண்பது புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட புதிய தலைமுறை டாக்சிகளை,” என்று கூறிய மலேசியப் பிரதமர், ஓட்டுநர்களும் புதிய செயல்முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
“கடந்த காலத்தில் வழக்கமான முறையில் கட்டணங்களைச் செலுத்தினோம். இப்போது புதிய செயலிகளைப் பயன்படுத்துகிறோம்,” என்று திரு அன்வார் சொன்னார்.
கூடுதல் பயிற்சி தேவைப்பட்டால், அமைச்சு அதிகாரிகள் டாக்சி நிலையங்களுக்குச் சென்று பயிற்சிகளை வழங்கலாம் என்றார் அவர்.
ஓட்டுநர்கள் பயிற்சி நிலையங்களில் ஒரு நாள் முழுதும் இருந்தால் அன்றைய வருமானத்தை இழக்க நேரிடும் என்று மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.


